Dowry suicides
*வரதட்சணை (தற்)கொலைகள்*
கருத்து சுருக்கம்:
“மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா” என்று பாடிய கவிமணி இன்று இருந்திருந்தால் தன் கருத்தை மாற்றி கொண்டிருப்பார்..அத்தகைய சிறப்புடைய பெண்கள் வரதட்சணையால் சொல்ல முடியாத துன்பங்களுக்கு ஆளாகி இறுதியில் தங்கள் உயிரை மாய்த்து கொள்ள காரணம் என்ன?
முன்பு பெற்றோரால் தட்சணை தர முடியாமல் கணவர் வீட்டாரால் கொலை செய்யப்பட்ட காலம் போய் எவ்வளவு கேட்டாலும் பெண்ணின் பெற்றோர் தந்தும் , தர தயாராக இருந்தும் கொலைகள் தற்கொலைகளாக மாற யார் காரணம்??
*பெற்றோர்களா **??*
வீட்டில் இளவரசி போல் உணர வைத்து ,, கேட்டதெல்லாம் வாங்கி தந்து ,, மணவாழ்க்கை குறித்து பல கனவுகளை காண வைக்கும் பெற்றோர் அந்த வாழ்க்கை தோல்வியில் முடிந்தால் நாங்கள் இருக்கிறோம் என கூற மறந்தது அல்லது மறுத்தது காரணம்..
*கணவன் காரணமா??*
பத்து மாதம் சுமந்து பெற்ற தாய்க்கு காட்டாமல் காத்த மானத்தை ஒரு மணி நேரம் கூட பார்த்து பேசாத ஒருவனிடம் கொண்ட நம்பிக்கையால் இழந்த நின்ற துணிச்சலை வாழ்நாள் முழுவதுக்குமான நம்பிக்கையாக மாற்றாத கணவன் காரணம்.
சமூகம் காரணமா??
கணவனை பிரிந்து வாழும் பெண்கள் என்றால் ஆண்கள் மட்டுமல்ல பெண்களுக்கும் அவர்கள் பேசு பொருளாக மாறிவிடுகிறார்கள்.. அவர்களது சுய ஒழுக்கமும் கேள்விக்குள்ளாக்கப்படும்.அவர்களின் மொத்த கற்பனையும் வெளிப்படும்.. இதன் மூலம் வெளிப்படும் மன உளைச்சலும் ஒரு காரணம்..
பெண்களும் ஒரு காரணமா???
அன்றைய நடைமுறை வேறு, இன்றைய நடைமுறை வேறு..பெண்களுக்கு பல்வேறு பாதுகாப்பு சட்டங்கள் ஏற்படுத்த பட்டுள்ளன.
• வன்கொடுமை தடுப்பு சட்டம்(PWDVA-2005)
• வரதட்சணை தடுப்பு சட்டம் 1961
• கணவர் மற்றும் அவரது உறவினர் கொடுமை படுத்துவதை தடுக்க IPC 498 A தற்போது BNS-Sec 85& 86(2023)
• வரதட்சணை மரணம் IPC 304B (BNS section 80)
இவ்வாறு பெண்களின் பாதுகாப்பு பல்வேறு வகையில் உறுதிப்படுத்த பட்டும் பெண்களின் மரணம் நாளடைவில் தற்கொலையாக மாறிய தருணம் எது? அவர்களை இந்த முடிவெடுக்க தூண்டியது எது??
என் பார்வையில் மேற்சொன்ன அனைவருக்கும் பங்கு உண்டு.. எனினும் அந்த காலத்தை விட அனைத்து விதத்திலும் முன்னேறியுள்ள பெண்கள் மனஉறுதியில் ஏன் பின்னடைந்தனர். நம் பாட்டிகளும் , அம்மாக்களும்,, குடிகாரனை கட்டிய பக்கத்து வீட்டு அக்காக்களும் படாத பாட்டையா இவர்கள் படுகிறார்கள்..
வாசல் படி தாண்டாத படிக்காத பாமர பெண்ணுக்கு இருக்கும் தைரியம் ஏன் இல்லை??
பாலுக்கு கூட கணவனிடம் கையேந்தும் பெண்ணின் துணிச்சல் யார் இல்லாவிட்டாலும் தன் சொந்த காலில் நிற்க முடிந்த பெண்ணிடம் எங்கு ஓடி ஒளிந்தது??
உயிரை விட துணியும் வீரம் வாழ வழி சொல்லாதது ஏனோ??
முடிவுரை :
பெண்களால் ஆக்கவும் முடியும் ;அழிக்கவும் முடியும்.. தீக்குச்சி காட்டையும் அளிக்கும், வெளிச்சமும் கொடுக்கும்.. பெண்ணே!! நீ ஆக்கும் குச்சியா? அழியும் குச்சியா?? உன் முடிவே சமூகத்தின் முடிவு..