விவாகரத்துகள் சமீப காலமாக அதிகரிக்க காரணங்கள்

0
1000102935.jpg

தலைப்பு : விவாகரத்துகள் சமீப காலமாக அதிகரிக்க காரணங்கள்…

சட்டமும் விவாகரத்தும்
சமீப காலங்களில் விவாகரத்துகள் அதிகரிக்க முக்கிய காரணம் ஆண்களின் குடும்ப மனநிலையும், கணவன்-மனைவி இடையிலான புரிதல் இல்லாமையும் ஆகும். திருமணத்திற்குப் பிறகு பல குடும்பங்களில் பெண்ணை ஒரு மனிதராக பார்க்காமல், ஒரு அடிமை போல நடத்தும் நிலை இன்னும் தொடர்கிறது. “பொண்ணுனா இப்படிதான் இருக்கணும்”, “ஆணுக்குக் கீழ்தான் பெண்” என்ற எண்ணங்கள் இன்றும் பல திருமணங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
திருமணம் ஆனவுடன் பெண் தன்னை இழக்க வேண்டியவளாக மாற்றப்படுகிறாள். அவளுக்கு சுயமாக யோசிக்க கூடாது, வேலைக்குப் போகக் கூடாது, சுய சிந்தனை இருக்கக் கூடாது, சுதந்திரமாக வாழக் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. எல்லாவற்றையும் பெண்களே அனுசரித்துக் கொண்டு போக வேண்டும் என்ற மனநிலையே பல பெண்களின் வாழ்க்கையை வேதனையாக மாற்றுகிறது. கணவன் மற்றும் அவரது குடும்பம் பெண்ணை புரிந்து கொள்ளாமல், ஆதரவு அளிக்காமல், ஆறுதலாக இருக்காததே விவாகரத்திற்கான முக்கிய காரணமாக உள்ளது. இது என் சொந்த அனுபவத்திலிருந்தே உருவான கருத்தாகும்.
இந்த நிலையில், சட்டம் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பாக செயல்படுகிறது. இந்து திருமணச் சட்டம், 1955 இன் பிரிவு 13ன் கீழ், கொடுமை (Cruelty), மன வேதனை, மரியாதையின்மை போன்ற காரணங்களுக்காக விவாகரத்து பெறும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. திருமணம் ஒரு பெண்ணுக்கு வலி மட்டுமே தரும் உறவாக மாறினால், அதை தொடர வேண்டும் என்ற கட்டாயம் சட்டத்தில் இல்லை.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் Shobha Rani v. Madhukar Reddi (1988) என்ற வழக்கில், மன மற்றும் உடல் கொடுமை திருமணத்தை முறிக்கத் தக்க சரியான காரணம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு, பெண்களின் மரியாதையும் மனநலமும் திருமணத்தைவிட முக்கியம் என்பதைக் காட்டுகிறது.
என் கருத்துப்படி, வலியால் நிரம்பிய திருமண வாழ்க்கையில் வாழ்ந்து மெதுவாக சாகும் நிலையை விட, விவாகரத்து செய்து தனியாக நிம்மதியாக வாழ்வதே சரியான தீர்வு. சட்டம் திருமணத்தை காப்பாற்ற மட்டுமல்ல, ஒரு பெண்ணின் வாழ்க்கையையும் காக்க வேண்டும். அதனால், தேவையான இடங்களில் விவாகரத்து தவறு அல்ல; அது ஒரு துணிச்சலான சரியான முடிவு.
அடுத்தவரை நம்மால் மாற்ற முடியாது. நம் வாழ்க்கையை நாம் மாற்றி கொண்டு சட்டத்தின் உதவியுடன் சுதந்திரமாக வாழ கற்றுக்கொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *